RMY BATCHA

Create your own banner at mybannermaker.com!

12 April 2012

தமிழ்ப் பெயரில்லா தமிழ் புத்தாண்டு


மக்களால் தேர்தேடுக்கப்பட்ட மக்களாட்சியின் சட்டத்தை மதிப்பது மக்களின் கடமையாகும்.

********************"நந்தன வருட தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்"*************************

ஆனால்தமிழர் புத்தாண்டு தை முதல் நாளே என்பதை ஆணித்தரமாக விளக்கும் கட்டுரை இது.

பஞ்சாங்கத்தில் உள்ள 60 ஆண்டுகளில் ஒன்றேனும் தமிழில் இல்லை. தமிழன் என்று தன்னைச் சொல்லிக் கொள்ளும் தன்மானம் உள்ள ஒருவனாவது அவற்றைத் தமிழ் ஆண்டு என்று ஒப்புக் கொள்ள மாட்டான். இந்த அறுபது ஆண்டுகளை கடவுளர்களோடு தொடர்புபடுத்தி, ஆபாசம் வழியும் கதைகளையும் புராணிகர்கள் உருவாக்கி விட்டார்கள். நாரதரும் கிருஷ்ணனும் உறவு கொண்டு பெற்ற குழந்தைகளே ‘பிரபவ முதல் அட்சய முடிய 60 ஆண்டுகள்’ என்று தமிழ்க் கலை களஞ்சியமான ‘அபிதான சிந்தாமணி’ கூறுகிறது. இதற்குப் புராண ஆதாரங்கள் வேறு உள்ளன. இந்த 60 ஆண்டுகளுக்கு மேல் 61 ஆவது ஆண்டைக் குறிக்கப் பெயர் இல்லை. மீண்டும் ‘பிரபவ’ ஆண்டிலிருந்து தான் தொடங்க வேண்டும் என்பது நடைமுறைக்கும் அறிவுக்கும் ஒவ்வாத மூடநம்பிக்கை ஆகும். இப்போது வழங்கும் ‘பிரபவ’ தொடங்கி, ‘அட்சய’ ஈறாக உள்ள 60 ஆண்டுப் பெயர்கள் சாலி வாகனன் என்பவனால் அல்லது கனிஷ்ஷனால் கி.பி. 78 இல் ஏற்பட்டவை. இவை வடநாட்டு அரசனால் ஏற்பட்டதனால் அவற்றின் பெயர்கள் வட மொழிப் பெயர்களாக உள்ளன. (பக்.7, இந்து 10-03-1940)
இந்த 60 ஆண்டு முறையால் தமிழர் மொழி, மரபு, மானம், பண்பு, வாழ்வு முதலியவற்றுக்கு ஏற்பட்டுள்ள அழிவும் இழிவும் இரண்டையும் எண்ணிப் பார்த்து உணர்ந்து தெளிந்த தமிழ் அறிஞர்கள், சான்றோர்கள், புலவர்கள் 1921 ஆம் ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் கூடி ஆராய்ந்து மூன்று முக்கிய முடிவுகளை எடுத்தார்கள்.

1. திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டைப் பின்பற்றுவது.
2. அதையே தமிழ் ஆண்டு எனக் கொள்வது.
3. திருவள்ளுவர் காலம் கி.மு. 31 (வழக்கில் உள்ள ஆங்கில ஆண்டுடன் 31யைக் கூட்டினால்) திருவள்ளுவர் ஆண்டு.
திருவள்ளுவர் ஆண்டுக்கு முதல் மாதம் தை, இறுதி மாதம் மார்கழி.

புத்தாண்டுத் தொடக்கம் தை முதல் நாள், கிழமைகள் வழக்கில் உள்ளவை. இந்த முடிவை எடுத்தவர்களில் தமிழகத்தின் மூத்த தமிழ் அறிஞர்கள் மறைமலை அடிகள், திரு.வி.க., சுப்பிரமணிய பிள்ளை, சச்சிதானந்தப் பிள்ளை, ந.மு. வேங்கடசாமி நாட்டார், நாவலர் சோம. சுந்தர பாரதியார், கி.ஆ.பெ. விசுவநாதம் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.
அதன் பின் 1937 டிசம்பர் 26 இல் திருச்சியில் ‘அகில இந்திய தமிழர் மாநாடு’ சோமசுந்தர பாரதியார் தலைமையில் கூடியது. அதில் தந்தை பெரியார், கரந்தை தமிழ்ச் சங்கத் தலைவர் உமா மகேசுவரனார், பேராசிரியர் கா. சுப்பிரமணியம், தெ.பொ. மீனாட்சி சுந்தரனார், திரு.வி.க. மறைமலை அடிகளார், பி.டி. இராசன், ஆற்காடு இராமசாமி முதலியார், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், பட்டுக் கோட்டை அழகிரி உட்படப் பலரும் பங்கேற்றனர்.

அந்த மாநாடும் தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்றும், பொங்கல் திருநாளே தமிழர் திருநாள் என்றும் பறைசாற்றியது. தமிழ்க் கடல் மறைமலை அடிகளார் சான்றுகளுடன் தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு தொடக்கம், பொங்கலே தமிழர் விழா என்று அறுதியிட்டுப் பேசினார்.
இந்த முடிவுகள் எந்த அடிப்படையில் எடுக்கப் பட்டன என்ற கேள்விக்கு முத்தமிழ்க் காவலர் முனைவர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்கள் மாநாட் டில் கலந்து கொண்டு பேசிய அறிஞர்களின் அறிவு, ஆராய்ச்சி, பட்டறிவு ஆகியவையே அடிப்படை என்று குறிப்பிடுங்கள் போதும்” என்று விளக்கம் தந்தார்.

தமிழ்ப் புத்தாண்டு குறித்து ஈழத்து அறிஞர் பண்டிதர் க.பொ. இரத்தினம் அவர்கள் ‘சித்திரை வருடப் பிறப்பு என்பது சாலிவாகனன் என்ற வடநாட்டு அரசனால் பின்னாளில் நிலைநாட்டப் பட்டது. இந்த அரசனுக்கு முன்னர் பல்லாயிரம் ஆண்டுகளாக நயத்தக்க நாகரிகத்துடன் வாழ்ந்த தமிழ் மக்கள் தம் நாட்டுப் பெருமகன் ஒருவனுடன் இணைந்த தொடர் ஆண்டை நிலைநாட்ட முயலாதது பெரும் விந்தையாக உள்ளது. (சித்திரை வருடப் பிறப்பை) வரவேற்று, (அதன் மூலம்) தமிழினத்தின் பழமையையும் பண்பையும் சிறப்பையும் செல்வாக்கையும் (இன்றைய தமிழர்கள்) சிதைத்து வந்துள்ளமை பெரும் வெட்கத்திற்கு இட மானதாகவும் இருக்கின்றது. தமிழ் மக்களிடையே நிகழ்ந்த மானக் கேடான நகைப்புக்கிடமான செயல் இது ஒன்று மட்டும்தானா? தமிழ் மக்களின் கோவில்களிலே இன்று தமிழ் மொழியும் தமிழ் இசையும் ஒதுக்கப்பட்டுள்ளன” என மிகக் கடுமையாக விமர்சித்து இருக்கிறார்.

தமிழீழத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிழல் ஆட்சி இருந்தபோது – கலைஞர் கருணாநிதியின் அறிவிப்புக்கு முன்னரே – தமிழர்களின் புத்தாண்டு தைப் பொங்கல் நாளான தை முதல் நாளே என அறிவித்திருந்தது நினைவு கூரத்தக்கது. தைப் பொங்கல் திருநாள் வான் சார்ந்து, மண் சார்ந்து, முழுமையான இயற்கை சார்ந்து உருவாகிய திருநாளாகும்!
1969 ஆம் ஆண்டு கலைஞர் ஆட்சி பொங்கல் திருநாளுக்கு அடுத்த நாளை திருவள்ளுவர் நாள் என்று ஏற்று அரசு விடுமுறை அளித்து ஆணை பிறப்பித்தது.
1971 இல் கலைஞர் கருணாநிதி ஆட்சி திருவள்ளு வர் ஆண்டு முறையை ஏற்றது. இம்முறையை 1971 முதல் அரசு நாள் குறிப்பிலும் 1972 முதல் அரசிதழிலும் வெளியிட்டது.
1981 முதல் எம்.ஜி.ஆர். ஆட்சி அரசின் அனைத்து அலுவல்களிலும் பின்பற்றி வருகிறது. எனவே தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு ஆகும்.
இடையில் வந்து புகுந்த சித்திரை, தமிழர் மீது புகுத்தப்பட்ட பண்பாட்டுத் திணிப்பாகும்.
சென்னை பள்ளிக்கூடத்தில் ஆங்கில மொழி மூலம் படித்த முதல்வர் ஜெயலலிதா, சைவ சித்தாந்தி தமிழ்க் கடல் மறைமலை அடிகளார், முத்தமிழ் அறிஞர் கி.ஆ.பெ. விசுவநாதம் போன்ற அறிஞர்களைவிடத் தனக்கு அதிகம் தெரியும் என்பது அறிவுடைமை அன்று. அஃது அவரது அறி யாமையை அல்லது ஆணவத்தைக் காட்டுகிறது எனலாம்.
பழந்தமிழகத்தில் ஆண்டுத் தொடக்கம் தை மாதமாக இருந்தது. பின்னர் ஆவணி ஆண்டின் முதல் மாதமாகக் கொள்ளப்பட்டது என்பது தொல் காப்பியத்துக்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர் எழுதிய உரை மூலம் தெரிகிறது. பின்பு சித்திரை ஆண்டின் முதல் மாதமாக மாற்றப்பட்டது. எனவே இழந்த தொன்மைச் சிறப்புக்குரிய தை மாதம் முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் ஆகும்.

தை முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டு என்பதற்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்ட இலக்கியங்களில் காணப் பெறும் சான்றுகள் பின்வருமாறு:

1. ‘தைஇத் திங்கள் தண்கயம் படியும்’ (நற்றிணை)
2. ‘தைஇத் திங்கள் தண்ணிய தரினும்’ (குறுந் தொகை)
3. ‘தைஇத் திங்கள் தண்கயம் போல்’ (புறநானூறு)
4. ‘தைஇத் திங்கள் தண்கயம் போல’ (அய்ங்குறு நூறு)
5. ‘தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ’ ‘(கலித் தொகை)
‘தைப் பிறந்தால் வழி பிறக்கும்’, ‘தை மழை நெய் மழை’ முதலான பழமொழிகள் இன்றும் வாழையடி வாழையாக வந்த வாய்மொழிப் பழமொழிகளாகும்.

இப்படி ஆண்டு, மாதம், நாள், கணக்குகளை மாற்றுவது சரியா? என்றால் வரலாற்றில் இத்தகைய மாற்றங்கள் காலத்துக்குக் காலம் நடந்தேறி இருக்கின்றன.

பூமி சூரியனைச் சுற்றி வர எடுக்கும் காலம் 365.242 நாள்களாகும். ஞாயிறு நாள்களைப் பண்டைய உரோமானியர் பத்து சம மாதங்களாக வகுத்தனர். அந்தப் பத்து மாதங்களுக்கு முறையே மார்ச், ஏப்ரல், மே, ஜுன், ஜூலை, ஆக°டு, செப்தெம்பர் (சப்த-ஏழு), அக்தோபர் (அஷ்ட-எட்டு), நொவெம்பர் (நவ-ஒன்பது), டிசெம்பர் (தச-பத்து) என மன்னர்கள், தெய்வங்கள் பெயர்களைச் சூட்டினர். ஜூலிய° சீசர் காலத்தில் (கி.மு. 47 இல்) நாள்காட்டியில் மேலும் திருத்தங்களை மேற் கொண்டார். பத்து மாதங் கள் 12 மாதங்களாக மாற்றி அமைக்கப்பட்டது.

முதல்வர் ஜெயலலிதா தனது அறிக்கையில் தமிழ்ப் புத்தாண்டைச் சித்திரைக்கு மாற்றியதற்கு இன்னொரு காரணத்தையும் மொழிந்தார். அது ஆண்டின் தொடக்கம் வசந்தமாக (இளவேனில்) இருப்பதற்காகக் கணிக்கப்பட்டதே சித்திரைப் புத்தாண்டு எனக் கூறினார். இந்தக் காரணம் அவருக்கு வானியல் பற்றிய அறிவு பற்றாது என்பதையே காட்டுகிறது.

தென்னாட்டுப் பஞ்சாங்கக் கணிப்பாளர்கள் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் வராகமிகரர் வகுத்துத் தந்த காலக் கணிப்பை அப்படியே இன்றும் பின்பற்றி வருகின்றனர். அதனால் 24 நாள்கள் காலக் கணக்கில் பின்தங்கிப் போய்விட்டது.
எடுத்துக்காட்டாக நள ஆண்டு சித்திரை முதல் நாளை எடுத்துக் கொள்வோம். இந்தியாவின் மத்திய அரசினுடைய நாள்காட்டி அன்று சக வருடம் 1899, சைத்ர மாதம் 24 ஆம் நாள் என்று காட்டுகிறது.
அதாவது, பஞ்சாங்கக்காரர்களுக்கு சித்திரை மாதம் முதல் நாள், மத்திய அரசிற்கும் பெரும்பாலான வட இந்தியப் பஞ்சாங்கங்களின் கணக்கு முறைக்கும் அதே நாள் சித்திரை 24 ஆம் நாள் ஆக இருந்து வருகிறது. 1957 இல் இந்திய நடுவண் அரசினால் இலாகிரி என்பவரது தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையமே இந்த மாறுபாட்டை கணக்கில் எடுத்து புதிய நாள் காட்டியை உருவாக்கியது.

இதனால், பஞ்சாங்க தமிழ் ஆண்டுக் கணிப்பு முறையில் குறையிருப்பதை உணரலாம். இக் குறையை நூறு ஆண்டுகளுக்கு முன்பே சுப்பிரமணிய பாரதியார் பஞ்சாங்கம் என்னும் கட்டுரையில் சுட்டிக் காட்டியுள்ளார்.

“வசந்த விஷு (ஆண்டு) வானது மேஷ ராசியின் ஆரம்பத்தில் இருந்தபொழுது உத்தராயணம் தை மாதப் பிறப்பன்று தொடங்கியது. அதற்கு அப்பால் கணக்குத் தவறிப் போய்விட்டது. அய விஷுக்களின் சலனத்தை அறியாமலோ, அறிந்திருந்தும் கவனியாமலோ ஸம்வத்சரத்தின் பரிமாணத்தில் இருபதரை நிமிஷம் பிந்தி வருகின்றன. 80 வருஷத்திற்கு சரியான 71.5 ஆண்டுகள்) ஒரு நாள் பிந்தி விடும். மேற்படி நியமங்கள் ஏற்பட்டு இப்போது அநேக நூற்றாண்டுகளாகி விட்டன. அதனால் புண்ய காலங்கள் 20, 22 நாள் பிந்திப் போய் நியமங்கள் பிரத்தியஷத்துக்கு விரோதமாகியிருக் கின்றன.” (பாரதியார் கட்டுரைகள் – பக்கம் 210-211)

தொல்பொருள் ஆய்வாளர் அய்ராவதம் மகா தேவன் சென்ற ஆண்டு நடந்த ஒரு வானியல் கருத்தரங்கில் பஞ்சாங்கத்தை உரிய காலத்தில் உரிய முறையில் திருத்தி அமைக்கத் தவறினால் பிற்காலத்தில் அயனப் பிறப்பு நாள்கள் தலைகீழாக மாறி, உத்தராயணப் புண்ணிய காலத்தைத் தட்சணாயப் பிறப்பு நாளென்று கொண்டாட நேரிடும் என எச்சரித்தார்.
எனவே, இந்தக் குளறுபடிகளை நீக்க வேண்டும் என்றால் தமிழ் ஆண்டுக் கணிப்பில் திருத்தம் செய்ய வேண்டும். அத்திருத்தம் சமய சார்பற்ற முறையில் அமைய வேண்டும். அதற்குத் திருவள்ளுவர் ஆண்டுக் கணக்கு முறையைப் பொங்கல் திருநாளில் தொடங்குவதே சாலவும் பொருத்தமாக இருக்கும்.

ஆக, பற்சக்கர வடிவத்தில் வடமொழியில் அரு வருப்பான பெயர்களைக் கொண்ட 60 ஆண்டுகளைப் பின்பற்றினால் வரலாற்றைப் பதிவு செய்வதில் குழப்பம் ஏற்படும். அறுபதுக்கு மேல் எண்ண முடியாது. திருவள்ளுவர் பெயரிலுள்ள தொடர் ஆண்டு இந்தக் குழப்பத்தை அடியோடு நீக்க உதவுகிறது.

60 ஆண்டு சுழற்சி வராது. தொடர்ச்சியாக ஆண்டுகளைக் கணக்கிடலாம்.
தமிழர்கள் வரலாற்றில் முதல்முறையாக தங்களுக்கென ஒரு தொடராண்டு (சகாப்தம்) உருவாக்கப்பட்டுள்ளதென பெருமிதத்துடன் கூறும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழுக்கும் தமிழருக்கும் பெருமை சேர்க்கும் பொய்யில் புலவர் திருவள்ளுவருக்கு நினைவாக அமையும். தமிழரின் திருநாளான பொங்கல் விழா தனிச் சிறப்படையும்

ஒரு இனம் பல நூற்றாண்டுகளாகக் கடைப் பிடிக்கின்ற மரபு அந்த இனத்திற்குத் தீங்கிழைக்கிறது என்று கண்டால் அந்த மரபு ஒழிக்கப்பட வேண்டும் அல்லது மாற்றியமைக்கப்பட வேண்டும். ஆதலால் தைப் பொங்கல் நாளான தைத் திங்கள் முதல் நாள் – திருவள்ளுவர் பிறந்த நாள்தான் தமிழனுக்குரிய தமிழ் புத்தாண்டு நாளாகும்!

முதல்வர் ஜெயலலிதா விரும்பினால் சித்திரை முதல் நாள் இந்துக்களின் ஆண்டுப் பிறப்பு என்று கொண்டாடலாம். ஆனால், அது தமிழ்ப் புத்தாண்டு அல்ல.

சோதிடர்களைக் கேட்டால் சூரியன் புவியைச் சுற்றி வருவதாகவே சொல்வார்கள். அதன் அடிப் படையிலேயே சாதகம் கணிக்கப்படுகிறது. உண்மையில் புவி தான் சூரியனை சுற்றி வருகிறது. புவி தனது அச்சில் சுற்றும் அதே வேளை சூரியனையும் ஒரு நீள் வட்ட வடிவமான ஓடு பாதையில் சுற்றி வருகிறது. புவி தனது அச்சில் தன்னைத் தானே விநாடிக்கு 30 கி.மீ. (மணிக்கு 108,000 கி.மீ.) வேகத்தில் சுழல்கிறது. ஒரு முறை புவி சூரியனை சுற்றி வர 365.26 நாட்களை எடுக்கிறது.
சனவரி 3 இல் பூமி சூரியனுக்கு அண்மையில் (147.3 மில்லியன் கிமீ) காணப்படுகிறது. ஜூலை 4 இல் பூமி சூரியனுக்கு தொலைவில் (152.1 மில்லியன் கி.மீ.) காணப்படுகிறது. ஆனால், பருவ மாற்றத்துக்கு பூமியின் தொலைவு காரணமல்ல. அதேபோல் கோள்கள், நட்சத்திரங்களும் காரணமல்ல. புவியின் அச்சு ஓடு பாதையின் செங்குத்துக் கோட்டிற்கு 23.45 பாகை சரிந்து காணப்படுகிறது. இந்தச் சாய்வில் மாற்றம் ஏற்படுவதில்லை. இதுவே பருவ மாற்றங்களுக்குக் காரணமாகும்.

பருவ மாற்றங்கள்
வடகோளத்தில் செப்டம்பர் 22 அல்லது 23 (இலையுதிர் சமபகல் இரவு வடதுருவம் ஞாயிறுக்கு அண்மையாகவோ, தொலைவாகவோ இல்லாமல் இருக்கும். அதேபோல் வடகோளத்தில் மார்ச்சு 20 அல்லது 21 (வேனில் சமபகல் இரவு) வடதுருவம் ஞாயிறுக்கு அண்மையாகவோ தொலைவாகவோ இல்லாமல் இருக்கும். இந்தச் சமபகல் இரவு குறுக்குக் கோட்டில் எங்கிருந்தாலும் வேறுபடாது. இந்த வேனில் சமபகல் இரவு நாளே வடகோளத்தில் வேனில் காலத் தொடக்கமாகும். அஃதாவது மார்ச்சு 20 அல்லது 21 வேனில் காலத் தொடக்கமாகும்.

எனவே ஞாயிறு சித்திரை முதல் நாள் (ஏப்ரல்
13 அல்லது 14) மேஷ இராசியில் அசுவினி நட்சத்திரத்தில் புகுகிறது (வானியல் கணிப்பின்படி ஞாயிறு வான் நடுக்கோட்டைக் கடக்கும் நாள் ஏப்ரல் 19 ஆகும்) என்பது சரியான கணிப்பு. ஆனால் வேனில் (வசந்த) காலம் ஏப்ரல் 14 இல் தொடங்குகிறது என்பது பிழையான கணிப்பு. வேனில் காலம் மார்ச் 20 அல்லது 21 இல் தொடங்குகிறது என்பதுதான் சரி! மேலே சொல்லியவாறு மாறி வரும் பருவங்களுக்கும் கோள்களுக்கும் நட்சத்திரங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. புவி தனது அச்சில் அதன் ஓடு பாதைக்கு 23.45 பாகை சரிந்திருப்பதே பருவங்கள் ஏற்படுவதற்குக் காரணமாகும்.
சித்திரைப் புத்தாண்டுக்கு வானியல் அடிப்படை இருப்பது போலவே தை புத்தாண்டுக்கும் வானியல் அடிப்படை இருக்கிறது. தை முதல் நாள் சூரியன் தனது தென்திசை பயணத்தை முடித்துக் கொண்டு தனு இராசியில் இருந்து விலகி, வடதிசைப் பயணத்தை மகர இராசியில் இருந்து தொடங்குகிறது.

மேலே கூறியவாறு பூமி சூரியனை ஒரு நீள் வட்டத்தில்சுற்றி வருகிறது. இது நமது கண்களுக்கு சூரியன் புவியைச் சுற்றுவது போன்ற மாயையை ஏற்படுத்துகிறது. ஒரு வட்டத்துக்குத் தொடக்கமும் முடிவும் இல்லை. அதன் தொடக்கம் எந்தப் புள்ளியிலும் தொடங்கலாம். சூரியனின் வடதிசைப் பயணத்தில் தனு இராசியில் இருந்து மகர இராசிக்கு (பாகை 270) உட்புகும் நாளும் (மகர சங்கராந்தி) வானியல் அடிப்படையில் ஆனதுதான்.

புவி தனது அச்சில் சுழலும்போது சூரியன் – நிலா இரண்டின் ஈர்ப்பாலும் அதன் நடுபகுதி புடைத்து துருவங்கள் சிறிது தட்டையாக இருப்பதாலும் அதன் அச்சில் தளம்பல் ஏற்பட்டு சுற்றும் வேகம் குறைகிறது. இதனால் புவி தனது பாதையில் ஆண்டொன்றுக்கு 50.26 ஆர்க் வினாடிகள் (20 மணித்துளி 14 வினாடி) மேற்குத் திசையில் பின்னுக்குத் தள்ளப்படுகிறது.
71.5 ஆண்டுகளில் இந்த வேறுபாடு 1 பாகை (ஒருநாள்) ஆகக் கூடிவிடும். இப்படி பின்னுக்குத் தள்ளப்படுவதை, ஆண்டைக் கணிக்கும் இந்திய சோதிடர்கள் கணக்கில் எடுப்பதில்லை. வானியலாளர்களும் மேற்குலக சோதிடர்களும் இதை கணக்கில் எடுக்கிறார்கள். இந்திய பஞ்சாங்கங்களில் கடந்த 2000 ஆண்டுகளாக ஏற்பட்டிருக்கும் இந்த கால வேறுபாடு திருத்தப்படவில்லை.

இதனால் பருவ காலங்கள் பிந்திப் போகின்றன. இந்த வேறுபாட்டைத் திருத்தி இருந்தால் சித்திரைப் புத்தாண்டு வேனில் தொடங்கும் மார்ச்சு 20-21 ஆம் நாள் கொண்டாடப்பட்டிருக்கும். இது போலவே ஏனைய விழாக்கள் பிழையான திகதியில் கொண்டாடப்படுகின்றன. இன்னும் 11.232 ஆண்டுகளில் புவியின் சம பகல் இரவு பின்னேகல் காரணமாக வேனில் சமபகல் இரவு துலா இராசியில்

0 பாகையில் சூரியன் புகும். அதாவது மேற்குல சோதிடத்தில் மார்ச்சு 20-21 இல் மேஷ இராசியில் சூரியன் புகும்போது இந்திய சோதிடத்தில் அதே சூரியன் தலா இராசியில் புகும். இரண்டும் எதிரெதிராக 180 பாகையில் இருக்கும்! பனி காலம் கோடை காலமாகவும் கோடைகாலம்
பனிக் காலமாகவும் (வடகோளத்தில்)மாறி விடும்!
சுட்டிகட்டுரை ஆசிரியர் ‘சோதிடப் புரட்டு’ நூலை எழுதிய நக்கீரன்.

6 comments:

நிலவன்பன் said...

அருமையான கட்டுரை

RMY பாட்சா said...

வருகைக்கு நன்றி தோழரே.

Gaana Kabali said...

தமிழ் புத்தாண்டு என்று சொல்லிக்கொண்டு வரும் அறுபது ஆண்டு பெயர்களில் ஒன்று கூட தமிழ் பெயர் இல்லை.

அன்று , வடமொழி ஆண்டுகளின் பெயர்களை தமிழ் புத்தாண்டு என்று இடைப்பட்ட காலத்தில் திணிப்பதற்கு ஒருசிலருக்கு உரிமை இருந்திருக்கிறது என்றால் , இப்பொழுது அதை மாற்றி அமைக்க தமிழனுக்கு உரிமை இல்லையா?

Gaana Kabali said...

//முதல்வர் ஜெயலலிதா விரும்பினால் சித்திரை முதல் நாள் இந்துக்களின் ஆண்டுப் பிறப்பு என்று கொண்டாடலாம். ஆனால், அது தமிழ்ப் புத்தாண்டு அல்ல.//

இந்துக்களின் ஆண்டு பிறப்பு என்று எப்படி சொல்வீர்? இந்தியாவில் உள்ள அத்தனை இந்துக்களும் சித்திரை முதல் நாளையா புத்தாண்டு என்று கொண்டாடுகிறார்கள்? எல்லா ஆண்டுகளின் பெயர்களும் சமஸ்கிருதத்தில் உள்ளன . ஆகவே சம்ஸ்கிருத புத்தாண்டு என்று கொண்டாடிவிட்டு போங்களேன் ,உங்களை யார் தடுக்கப்போகிறார்கள்?

RMY பாட்சா said...

"பஞ்சாங்கத்தில் உள்ள 60 ஆண்டுகளில் ஒன்றேனும் தமிழில் இல்லை. தமிழன் என்று தன்னைச் சொல்லிக் கொள்ளும் தன்மானம் உள்ள ஒருவனும் அவற்றைத் தமிழ் ஆண்டு என்று ஒப்புக் கொள்ள மாட்டான்"
வருகைக்கு நன்றி தோழரே.

RMY பாட்சா said...

"//தமிழர் புத்தாண்டு தை முதல் நாளே என்பதை ஆணித்தரமாக விளக்கும் கட்டுரை இது"//