RMY BATCHA

Create your own banner at mybannermaker.com!

18 November 2011

குடந்தையில் சாலை, குடிநீர்ப் பணிகளுக்கு ரூ. 15 கோடி: நகர்மன்றத்தில் தீர்மானம்

கும்பகோணம், நவ. 16: கும்பகோணம் நகரில் சுமார் ரூ. 15 கோடியில் சாலை, குடிநீர் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்வது என புதன்கிழமை நடைபெற்ற நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
 நகர்மன்ற சாதாரண கூட்டத்திற்கு அதன் தலைவர் ரத்னா சேகர் தலைமை வகித்தார். துணைத் தலைவர் ராஜா நடராஜன், ஆணையர் வரதராஜன் மற்றும் அலுவலர்கள், நகராட்சி உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
 கூட்டத்தில் பேசிய நகர்மன்றத் தலைவர் ரத்னா சேகர், உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துத் தெரிவித்தார்.
 தொடர்ந்து பேசிய நகர்மன்ற காங்கிரஸ் உறுப்பினர் கோவிந்தராஜன், நகராட்சி பகுதிகளில் தூய்மைப் பணியை விரைவாக மேற்கொண்டதற்கு பாராட்டு தெரிவித்தார்.
 திமுக உறுப்பினர் சு.ப. தமிழழகன் பேசும்போது, திமுக உறுப்பினர்கள் சார்பில், மக்கள் நலப் பணியாளர்களை மீண்டும் தமிழக அரசு பணிக்கு சேர்க்க வலியுறுத்தி கொடுக்கப்பட்ட தீர்மானத்தை நகர்மன்றம் எடுத்துக்கொள்கிறதா இல்லையா? எனக் கேள்வி எழுப்பினார்.
 அப்போது பேசிய துணைத் தலைவர் ராஜாநடராஜன், தமிழக அரசு எடுத்த முடிவிற்கு நகர்மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவதால் பயன் இல்லை என்றார்.
 தொடர்ந்து, அந்தப் பொருளை நகர்மன்ற விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள வழிவகை இல்லை எனத் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, திமுக உறுப்பினர்கள் 18 பேரும் வெளிநடப்பு செய்தனர்.
 இதையடுத்து, நகர்மன்றத் தலைவரால் கொண்டுவரப்பட்ட, சுற்றுலா நகரமாக விளங்கும் கும்பகோணத்திலிருந்து ஜெயங்கொண்டம் - விருத்தாசலம் வழித்தடத்தில் அகல ரயில் பாதை அமைத்து கொடுக்க தீர்மானம் நிறைவேற்றி, தமிழக முதல்வருக்கும், மத்திய ரயில்வே அமைச்சகத்திற்கும் அனுப்பி வைப்பது, கும்பகோணத்திற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காகவும், சுற்றுலாவை மேம்படுத்தும் வகையிலும் நகராட்சியால் வசூல் செய்யப்படும் நுழைவுக் கட்டணம் ரத்து செய்யப்படும் எனவும், இதைத்தொடர்ந்து, 10 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
 தொடர்ந்து நடைபெற்ற நகர்மன்ற அவசரக் கூட்டத்தில், நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் ரூ. 5.70 கோடியில் 62 சாலைப் பணிகளும், ரூ. 9.25 கோடியில் 7.5 கி.மீ. தொலைவிற்கு குடிநீர் விரிவாக்கப் பணிகள் மேற்கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 இதையடுத்து நடைபெற்ற விவாதத்தில், திமுக உறுப்பினர் குட்டி தட்சிணாமூர்த்தி பேசும் போது, பழுதடைந்துள்ள சாலைகள் மேம்பாட்டுத் திட்டப் பணியில் எடுக்கப்படவில்லை என்றார்.
 திமுக உறுப்பினர் கண்ணன் பேசும் போது, 45-வது வார்டில் உள்ள இளங்காநகர் சாலை பல ஆண்டுகளாக மிகவும் மோசமாக உள்ளது. போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
 திமுக உறுப்பினர் சுப்பிரமணியன் பேசும் போது, 15-வது வார்டு குடிசைத் தெருவுக்கு சாலை வசதி ஏற்படுத்த வேண்டும் என்றார்.
நன்றி தினமணி., 

No comments: