RMY BATCHA

Create your own banner at mybannermaker.com!

01 June 2012

கும்பகோணத்தில் முகமூடி கொள்ளை.


கும்பகோணம் டாக்டர் ராமமூர்த்தி ரோடு 2 - வது தெரு செல்லம் நகரில் வசித்து வருபவர் செந்தில் குமார். டாக்டர். தனியார் ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி லலிதாம்பிகை. இவர் டாக்டருக்கு படித்துள்ளார். ஆனால் குடும்பத் தலைவியாக உள்ளார். நேற்று இரவு செந்தில் குமாரும் அவரது மனைவி லலிதாம்பிகையும் வீட்டில் ஏ.சி. அறையில் படுத்து தூங்கி கொண்டு இருந்தனர். நள்ளிரவு 12.30 மணியளவில் டாக்டர் செந்தில் குமாருக்கு கும்பகோணம் ரெயில் நிலையம் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் இருந்து போன் வந்தது. நோயாளி ஒருவருக்கு அவசரமாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டி உள்ளது. உடனே புறப்பட்டு வாருங்கள் என போனில் பேசியவர்கள் தகவல் தெரிவித்தனர். செந்தில் குமாரும் தனது மனைவியிடம் தெரிவித்து விட்டு ரெயில் நிலையம் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு புறப்பட்டு சென்றார். செல்லும் போது வீட்டின் வெளிப்புற கதவை பூட்டி சென்றார். இதனை நோட்டமிட்ட கொள்ளை கும்பலை சேர்ந்த 2 பேர் அங்கு வந்தனர். அவர்கள் முகத்தில் முகமூடி அணிந்திருந்தனர். டாக்டர் செந்தில் குமார் வீட்டின் வெளிப்புற கதவை உடைத்து அக் கும்பல் உள்ளே நுழைந்தது. பெண் டாக்டர் லலிதாம்பிகை ஏ.சி. அறையில் படுத்து இருந்ததால் கொள்ளையர்கள் வெளிப்புற கதவை உடைக்கும் சத்தம் கேட்கவில்லை. உள்ளே புகுந்த அக்கும்பல் லலிதாம்பிகை படுத்திருந்த அறையின் கதவையும் உடைத்து உள்ளே புகுந்தது. திடீரென முகமூடி கொள்ளை கும்பல் வீட்டிற்குள் புகுந்தததை பார்த்ததும் டாக்டர் லலிதாம்பிகை அதிர்ச்சி அடைந்தார். அவர் சத்தம் போட முயன்றார். அவரை கொள்ளை கும்பலை சேர்ந்தவர்கள் கத்தி முனையில் மிரட்டினர். சத்தம் போட்டால் கொன்று விடுவோம் என்றனர். இதனால் லலிதாம்பிகை பயந்து போனார். உடனே கொள்ளை கும்பலை சேர்ந்தவர்கள் வீட்டில் பணம், நகை எங்கு இருக்கிறது என மிரட்டி கேட்டனர். பீரோவில் ரூ. 3 லட்சம் பணம் இருப்பதாக லலிதாம்பிகை தெரிவித்தார். உடனே கொள்ளைக் கும்பல் அந்த பணத்தை எடுத்துக் கொண்டது. மேலும் கத்தி முனையில் லலிதாம்பிகை அணிந்திருந்த 5 பவுன் நகையையும் பறித்தனர். பின்னர் கொள்ளை கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டது. கொள்ளை போன நகை, பணத்தின் மதிப்பு ரூ. 4 லட்சம் ஆகும். கொள்ளையர்கள் தப்பி சென்ற பின்னர் இந்த சம்பவம் குறித்து லலிதாம்பிகை தனது கணவர் செந்தில் குமாருக்கு தகவல் தெரிவித்தார். அவர் உடனடியாக வீட்டிற்கு விரைந்து வந்தார். இது குறித்து கும்பகோணம் கிழக்கு போலீசில் புகார் செய்யப்பட்டது. தகவல் கிடைத்ததும் தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அனில் குமார் கிரி, டி. எஸ். பிக்கள் சிவபாஸ்கர், இளங்கோவன் ஆகியோர் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். கைரேகை நிபுணர்கள் மற்றும் போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. கைரேகை நிபுணர்கள் கொள்ளையர்களின் ரேகைகளை பதிவு செய்தனர். போலீஸ் மோப்ப நாய் கொள்ளை நடந்த வீட்டை மோப்பம் பிடித்து விட்டு சற்று தூரம் ஓடியது. கொள்ளையர்களை பிடிக்க இன்ஸ்பெக்டர் அழகேசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் பல்வேறு கோணங்களில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.கும்பகோணத்தில் இது வரை முகமூடி கொள்ளை சம்பவம் நடைபெற்றதில்லை. தற்போது தான் முதல் முறையாக நடைபெற்றுள்ளது. இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நன்றி-மாலைமலர்

No comments: